யார் இந்த மகேஷ் தாஸ்

அக்பர் மன்னருக்கு வேட்டையாடுவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. படிப்பை விட வேட்டையாட செல்வதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். பின்னர், அவர் அரசவையில் இருந்த அனைவரையும் விட சிறந்த குதிரை வீரராகவும், வேட்டைக்காரராகவும் மாறினார்.
ஒருநாள், அக்பர் தனது சில அரசவை உறுப்பினர்களுடன் வேட்டைக்கு சென்றார். அவர்கள் அனைவரும் வேகமாக குதிரைகளை செலுத்தி, மற்றவர்களை பின்னால் விட்டுவிட்டு வெகுதூரம் சென்றார்கள். மாலை நேரம் நெருங்கியது, எல்லோருக்கும் பசி மற்றும் தாகம் எடுத்தது. ஆனால், அவர்கள் வழி தவறி எங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர்.
கடைசியில், மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு இடத்தை அடைந்தார்கள். தலைநகருக்குச் செல்ல ஒரு வழி கிடைத்ததில் மன்னர் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், ஆக்ராவிற்குச் செல்லும் சாலை எதுவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் ஒரு சாலையில் வருவதை கண்டார்கள்.
மன்னர் அவனை அழைத்து, “ஏய் சிறுவனே! ஆக்ராவிற்கு செல்லும் சாலை எது?” என்று கேட்டார். சிறுவன் சிரித்துக்கொண்டே, “ஹுஸூர், சாலைகள் நகர முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் இந்த சாலைகள் எப்படி ஆக்ராவுக்கோ அல்லது வேறு எங்கோ செல்ல முடியும்?” என்று சொல்லிவிட்டு தன்னுடைய நகைச்சுவைக்கு தானே சிரித்தான்.
அனைவரும் அமைதியாக இருந்தனர், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சிறுவன் மீண்டும் சொன்னான், “மனிதர்கள்தான் பயணம் செய்வார்கள், சாலைகள் அல்ல. அப்படித்தானே?” பேரரசர் சிரித்துக்கொண்டே, “ஆமாம், நீ சொல்வது சரிதான்” என்றார். பேரரசர் மீண்டும் கேட்டார், “உன் பெயர் என்ன, சிறுவனே?” “மகேஷ் தாஸ்” என்று பதிலளித்த சிறுவன், பேரரசரை பார்த்து, “நீங்கள் யார் ஹுஸூர்? உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். பேரரசர் தனது மோதிரத்தை எடுத்து சிறுவனிடம் கொடுத்தார். “நீ பேசுவது ஹிந்துஸ்தானின் மன்னர் அக்பரிடம். உன்னைப் போன்ற பயமில்லாத மனிதர்கள் எங்களுக்கு தேவை. இந்த மோதிரத்துடன் நீ அரசவைக்கு வா, உன்னை நான் உடனே அடையாளம் கண்டு கொள்வேன். இப்போது ஆக்ராவிற்கு செல்லும் வழியை சொல். நாங்கள் விரைவில் அங்கு செல்ல வேண்டும்?” என்று கேட்டார்.
மகேஷ் தாஸ் பணிவுடன் வணங்கி ஆக்ராவிற்கு செல்லும் சாலையை சுட்டிக்காட்டினான். மன்னரும் அந்த சாலையில் சென்றார்.
இப்படித்தான் பேரரசர் அக்பர் எதிர்காலத்தில் பீர்பால் என்று அழைக்கப்பட்ட மகேஷ் தாஸை சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *